Thursday, August 13, 2009

நீங்க லவ் பண்றீங்களா??



நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...

12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம்
தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க..

10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.

9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.

8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு
தெரியவே மாட்டாங்க

6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.

5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.

4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க

3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல
இருந்துட்டேயிருந்துருப்பாங்க

2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7
மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.

1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக்
பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க.

கவனம் பக்கத்தில யாரும் பாத்திட போறாங்க....

நல் நட்பு


அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அடுத்ததுதான் ஆண்டவன்
அவனுக்கும் நேரமில்லை
அதற்குத்தான் ஒரு நண்பன்

கூடப்பிறந்தது சகோதரம்
கூடியதால் பிறந்தது குழந்தை
கூப்பிட்டால் வருவாள் மனைவி
கூடவே வருவான், அவன்தான் நண்பன்

தீயவற்றை எனக்குச் சுட்டி
நல்லவற்றுக்குத் தோள் தட்டி
நியாய அநியாயங்களைக் காட்டி
விளக்கி நிற்பான் நல் நண்பன்

நாள் முழுதும் இருந்து- கதை
ஆயிரம்தான் பேசினாலும்- நண்பன்
பிரியும் நேரத் தோள் தட்டு
நாலாயிரம் கதை பேசும்

நட்பாகப் பழகுகிறார்
நாகரிக அப்பாமார்
Generation gapஐ இங்கு
நட்புத்தான் நிறைக்குதென்று

நடைமுறை உலகத்தில்
நட்புத்தான் குறைந்துபோச்சு
நட்புக்கும் இணயத்தை
நாடவேண்டிய நிலையாச்சு

நட்புக்கு உயிரையே
கொடுத்தான் கர்ணன் பாரதத்தில்
உன் நட்புக்கு நீ அப்படியா
கேட்டுப்பார் உன் அகத்தில்.
Read more...

பின்விட்டு ஜோடியின் முறுவல்களும் முன்வீட்டு முந்தானை விலகல்களும்

அடுத்தவர் வீட்டில் என்ன
நடக்குது என்று பார்க்க
ஆவலாய் நிற்கும் நங்கை
ஆங்காங்கே இருக்கின்றார்

வேலைக்காரியை விட்டு
வேவுபார்த்த காலம் போய்
தானே களமிறங்கி
தகவல்கள் திரட்டுகிறார்

தன் வீட்டுத் தகவல்களை
லாக்கருக்குள் பூட்டிவிட்டு
அடுத்த வீட்டு வேலிக்கருகே
அவசரமாய் ஒதுங்குகிறார்

காலையில் கணவருடன்
கத்திச் சண்டை போடும் புவனா
மாலையில் குழைவதை
மகிழ்ச்சியோடு பார்க்கின்றார்

மனதைப் பறிகோடுத்த
மங்கையவள் காதலனை
மறைவிடத்தில் சந்திப்பதை
மறைந்திருந்து பார்க்கின்றார்

பின்னேரப் பொதுக்கூட்டத்தில்
எடுத்தியம்ப வசதியாக
அடுத்தவீட்டுத் தகவல்களை
ஆவலுடன் சேர்க்கின்றார்

தன் வீட்டுத் தகவல்கள்
வேலியைத் தாண்டாதென்ற
தவறான கணிப்பினிலே
தாண்டவமும் ஆடுகின்றார்

அடுத்த வீட்டுத் தகவல்களை
ஆவலாய்ச் சேர்ப்பவர்க்குத் தெரியாது
அந்த வீட்டு விமலாவிற்கும்
அதுதான் வேலையென்று.


தலைப்பைப் பார்த்துவிட்டு வேறு ஏதாவது இருக்குமென்று எதிர்பார்த்து வாசித்தால் நான் பொறுப்பல்ல.

Monday, June 8, 2009

உடலைப் பேண பத்து கட்டளைகள்


மே 27, 2009 இல் 11:18 பிற்பகல் (இன்னபிற, பத்துக் கட்டளைகள்)
Tags: இளமை, மருத்துவம், health






உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.



1. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.




2. தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.


3. சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள்.


4. நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.


5. மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.


6. உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.


7. உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள்.


8. இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே !




9. எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.


10. தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் உத்தரவாதம் !



நன்றி : தமிழ் ஓசை – களஞ்சியம்

Thursday, June 4, 2009

வயிற்றுக்கு என்ன இட வேண்டும் ?


மார்ச் 24, 2007 இல் 6:45 பிற்பகல் (உணவு)


( தமிழ் ஓசை நாளிதழ் களஞ்சியம் இணைப்பிதழில் வெளியான எனது கட்டுரை )


இன்றைய அவசர உலகில் மனிதன் அறிவைத் தேடுவதற்கு நேரத்தையும், கவனத்தையும், பணத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் மிகவும் முக்கியமானத் தேவையான ஆரோக்கியமான உடலைப் பேணும் அக்கறை பெரும்பாலானவர்களிடம் இல்லை. ஆரோக்கியமான உணவு, அளவான உடற்பயிற்சி போன்றவை மனிதனின் உடலை மட்டுமல்ல மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

இன்று குழந்தைகள் உடல் எடை அதிகரிப்பது ஒரு சர்வதேசப் பிரச்சனை ஆகிவிட்டது. இங்கிலாந்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் தொன்னூறு கிலோ எடையுடன் இருந்த செய்தி இங்கிலாந்து ஆரோக்கிய இதழ்களில் அதிர்ச்சியாய் அலசப்பட்டது.

இந்தியாவிலும் குழந்தைகள் தாறுமாறாக எடை அதிகரிப்பது சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும், பெரியவர்களைத் தாக்கும் நீரிழிவு போன்ற நோய்கள் இன்று சிறு வயதினரையும் தாக்குவதாகவும் மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு இந்தியாவின் பரவியிருக்கும் மேல் நாட்டு உணவுப் பழக்கவழக்கங்களும், இன்றைய வாழ்க்கை முறையுமே இதன் முக்கிய காரணமாக இருக்கின்றன.

ஓடு விளையாடு பாப்பா என்பதெல்லாம் பாட நூலில் படித்ததுடன் சரி என்னும் நிலமை தான் இன்றைய நகர்ப்புறக் குழந்தைகளுக்கு. சதுர அடிகளில் தீப்பெட்டி போன்ற அறைகளில் வாழும் இவர்கள் பெரும்பாலும் கணினி விளையாட்டையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ தான் பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார்கள். உடலுழைப்பைத் தரும் பொழுதுபோக்குகள் பெருமளவு குறைந்து விட்டன.

கிராமங்களிலெல்லாம் ‘கல்லைத் தின்றால் கூட கரையும் வயது’ என்று இளைஞர்களைச் சொல்வார்கள். ஏனெனில் அந்த வயதினர் உண்ணும் எந்தப் பொருளாக இருந்தாலும் அது அவர்களுடைய கடின உழைப்பினால் கரைந்து உடலோடு கலந்து விடுகிறது. வயலிலும், காடு மேடுகளிலும் உழைப்பவர்கள் சராசரியாக ஒரு நாள் பத்து கிலோ மீட்டர் தொலைவாவது நடந்து விடுகிறார்கள். நடத்தல் என்பது வாழ்வின் அங்கமாகி விட்டது அங்கே.

இன்றைய நகர்ப்புற வாழ்க்கை அப்படியல்ல. இப்போது இலகுவான உணவு உட்கொண்டால் கூட அது கரையாமல் உடலில் கொழுப்புச் சத்தாகத் தேங்கிவிடும் அபாயம் உண்டு. காரணம் உடல் உழைப்பு இல்லை. வீட்டிலிருந்து வெளியே இறங்கியவுடன் வாகனம், அலுவலகம் விட்டதும் வீட்டுக்கு வாகனம். வீட்டுக்குள்ளே கட்டிப் போட தொலைக்காட்சி, கணினி. மொத்தத்தில் இருக்கைச் சிலைகள் போல இருக்கும் வாழ்க்கை.

கிராமப் புறங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு வாழ்க்கையே உடற்பயிற்சியாகி விடுகிறது. எனவே அவர்கள் தனியாக உடற்பயிற்சி செய்யத்தேவை இல்லை என்றாகிறது. நகர்ப் புறங்களைப் பொறுத்தவரையில் உடற்பயிற்சியை ஒரு பணியாக எடுத்துச் செய்ய வேண்டி இருக்கிறது.

ஆரோக்கியமான உடல் உயரத்துக்கும் எடைக்கும் இடையே ஒரு சூத்திரத்தைக் கொண்டு இயங்குகிறது. உடல்பருமன் சுட்டு எண் என்று இதை அழைக்கிறார்கள். உங்கள் எடையை உங்கள் செண்டீ மீட்டர் உயரத்துடன் இரண்டு முறை வகுத்து பத்தாயிரத்துடன் பெருக்கும்போது கிடைக்கும் எண்ணே உடல் பருமன் சுட்டு எண். ( உடலின் எடை) / ( உயரம் செமீ x உயரம் செமீ ) x 10000.

இந்த விதியின் படி 18.5 க்கும் 25க்கும் இடைப்பட்ட சுட்டு எண் உங்களுக்கு வருகிறது என்றால் நீங்கள் அதிக எடை கொண்டவர் அல்ல. நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொண்டவர் என்று பொருள். அதற்கு மேல் எனில் உடல் எடை அதிகம் என்று அறிந்து கொள்ள வேண்டும். இந்த அளவு 35 ஐ விட அதிகரித்தால் ஆரோக்கியக் குறைவுக்கான வாய்ப்புகள் மிக அதிகம் எனவும், இந்த எடை மிக மிக அதிகமானது என்பதையும் உணர வேண்டும். அதை சாதாரண நிலைக்குக் கொண்டு வர முயலவேண்டும்.

பீட்சா, சிப்ஸ், கோக், பெப்ஸி, சாக்லேட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற வகையறாக்களை உண்ணும் போது நமது உடலில் அதிகப்படியான கலோரிகள் தேங்குகின்றன. இவற்றை உண்டு விட்டு அதிக உடலுழைப்பைச் செலுத்தாத போது இந்த கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து விடுகின்றன. இப்படிச் சேரும் கொழுப்பே ஆரோக்கியத்துக்கு எமனாக மாறிவிடுகிறது.

தேவையான சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை, தேவையான நேரத்தில், தேவையான அளவுக்கு உண்பதே சிறந்த உணவுப் பழக்கம் எனலாம்.

நாம் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியமான காரணியாக ஏதேனும் பரம்பரை நோய்கள் இருக்கின்றனவா என்பதை அறிந்து கொள்வது அவசியம். சர்க்கரை நோய் போன்ற பரம்பரை நோய்கள் இருக்கும் குடும்பத்தினர் சற்று எச்சரிக்கையுடன் அத்தகைய உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

இந்தியர்களின் உணவுப் பழக்கம் பெரும்பாலும் தானியங்களைச் சார்ந்தே உள்ளது. அரிசி, கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களில் புரதச் சத்து அதிக அளவில் கிடைக்கிறது. கால்சியம், இரும்பு போன்ற சத்துக்களும் இதில் கிடைக்கின்றன.

தானியங்களைப் போலவே புரதச் சத்துக்கு பருப்பு வகைகளும் துணை செய்கின்றன. கடலை, துவரை, உளுத்தம், பாசி , பட்டாணி, துவரம் பருப்பு போன்ற பலவகைப் பருப்புகள் புரதச் சத்துக்குப் பயன்படுகின்றன.

முந்திரி, பாதாம், தேங்காய் , நிலக்கடலை, பிஸ்தா, தேங்காய் போன்றவற்றில் கொழுப்பு சத்து அதிகம் எனவே குறைத அளவு பயன்படுத்துவது பயன் தரும்.

கொழுப்பு சத்து வெண்ணெய், நெய், வனஸ்பதி, தாவர எண்ணை போன்றவற்றில் கிடைக்கிறது. கொழுப்பு உடலில் சேர்வது பலவகையான இன்னல்களை உருவாக்கும். எனவே நாம் உண்ணும் உணவில் கொழுப்பு சத்து ஐந்து முதல் பத்து சதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பழங்களில் உயிர்ச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. கொய்யா, நெல்லிக்காய், திராட்சை போன்றவை வைட்டமின் சி தன்மையை அதிகம் கொண்டுள்ளன. வாழைப்பழங்களில் கார்போ கைட்டிரேட் அதிகம். உலர்ந்த பழங்களில் இரும்புச் சத்து அதிகம். ஆப்பிள் பழம் நார்ச்சத்து மிகுந்தது. ஆப்பிள் எளிதில் செரிமானமாகி விடும் உணவாகவும் இருப்பதால் உடலுக்கு நல்ல சத்து கிடைக்கிறது.

நுரையீரலை வலுப்படுத்தவும், பசியைத் தூண்டவும், இரத்தம் தூய்மையாக்கல், பித்தத் தன்மை மாற்றுதல் போன்ற பல தன்மைகளை நெல்லிக்காய் கொண்டுள்ளது.

கீரை வகைகளே ஆரோக்கிய உணவு என்றதும் நம் கண்களுக்கு முன்னால் வரும். கீரையில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம் போன்ற பல சத்துகள் உள்ளன. கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பலனளிக்கும்

கிழங்குகள் முக்கியமாக கார்போஹைடிரேட் அதிக அளவில் கொண்டிருக்கின்றன. மரவள்ளிக்கிழங்கில் கால்சியம், உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, காரட்டில் கரோட்டீன் என பல சத்துகள் இவற்றில் அடங்கியுள்ளன. காய்கறிகளையும் அதிக அளவில் பயன்படுத்துதல் பயனளிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பாலில் புரதச் சத்து அதிகம். கொழுப்புச் சத்து குறைவு. மீன்களில் ஏராளமான புரதம், கால்சியம் போன்ற சத்துகள் உள்ளன. இவை இறைச்சியைப் போல கொழுப்புச் சத்து அதிகம் இல்லாததால் பெருமளவு விரும்பப்படுகிறது. இறைச்சி புரதச் சத்து மிகவும் அதிக அளவில் உண்டு.

அவ்வப்போது உண்ணா நோன்பு இருப்பது நம்முடைய உடலின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது என்று இன்றைய மருத்துவம் சொல்வதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு சொன்ன பெருமை நமது இந்தியப் பாரம்பரியத்துக்கு உண்டு.

சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகள் உயிர்ச்சத்து ( வைட்டமின் ) மாத்திரைகள் உட்கொள்வது உடலுக்குக் கேடு என்றும், அதற்குப் பதிலாக அந்த சத்து உள்ள இயற்கை உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

வைட்டமின் எ நமது திசு வளர்ச்சி, பல் அமைப்பு ஒழுங்கு, கண்பார்வை போன்றவற்றுக்குத் தேவையானது. இந்த சத்து குறையும் போது மாலைக் கண்நோய் தாக்கலாம், தோல் தனது மிருதுவான தன்மை இழத்தலும் வைட்டமின் எ குறைபாடின் விளைவுகளே. ரெடினால், கரோடெனாய்ட் எனும் இரண்டு சத்துக்களில் வைட்டமின் எ இருக்கிறது. இது காய்கறிகள், பப்பாளி, பூசணிக்காய், ஆடு, மாடு, நெய், முட்டை போன்றவற்றில் இது கிடைக்கிறது.

வைட்டமின் டி – யைப் பொறுத்தவரை எலும்பை வலுவாக்கும் கால்சியம் இதில் இருக்கிறது. மீன் எண்ணை, முட்டையின் மஞ்சள் கரு, பால் வெண்ணெய், நெய் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது. வைட்டமின் இ – திசுக்களின் நிலைத்தன்மைக்குப் பயன்படுகிறது. இது காட்டை வகைகளில் அதிகமாக கிடைக்கிறது.

வைட்டமின் சி, ஒரு இன்றியமையாத சக்தி. மூட்டு வீக்கம், ஈறுகள் பலமின்மை, உடல் பலவீனம், எரிச்சல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், ரத்த சோகை போன்ற பல நோய்களுக்கு இந்த சத்து குறைபாடு காரணமாகி விடுகிறது. எலுமிச்சை, ஆரஞ்ச், நெல்லிக்காய், முட்டைகோஸ் போன்றவற்றில் இந்த சத்து உண்டு. சமைக்காமல் உண்ணும்போது இந்த சத்து நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

பப்பளிப்பழம் போலிக் அமிலம், இரும்புச் சத்து, காப்பர், பொட்டாசியம் என பல சத்துகளை உள்ளடக்கியது. மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காகவே உதாசீனப்படுத்தப் படும் பப்பாளிப் பழம் தென்னமெரிக்கா போன்ற நாடுகளில் ஆரோக்கியப் பழம் என்று அழைக்கப்படுகிறது.

எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சமைக்காத உணவுகளையும் உண்ண வேண்டும். காய்கறிகளை வெட்டி சாலட் செய்வது, பழங்கள் உண்பது போன்றவற்றினால் சத்து முழுமையாக மனிதனுக்குக் கிடைப்பதுடன் உடலும் சுறுசுறுப்படைகிறது. நிறைய தண்ணீர் குடிப்பதும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவும்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனை விட இன்றைய மனிதன் இயற்கையை விட்டு விலகிச் சென்றிருப்பதே பல நோய்கள் நெருங்கி வந்திருப்பதன் காரணம் என்பதைப் பல ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.

ஒரு நாளைக்கு எத்தனை கலோரி சத்து தேவை என்பதைக் கணக்கிடவும் ஒரு சூத்திரம் இருக்கிறது. அதாவது நமது உடல் எடையை பத்தால் பெருக்கி, அதனுடன் நமது உடல் எடையை இரண்டு முறை கூட்டி வரும் தொகை நமக்குத் தேவையான கலோரியின் அளவு

அதாவது 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதருக்கு ( 70 *10 = 700, 700+ 70+70 = 840) 840 கலோரிகள் தேவை. ஒரு சிறு பாட்டில் கோக் குடிக்கும்போது உடலில் சேரும் கலோரியின் எடை சுமார் 100 என்பது கவனிக்கத் தக்கது.

பெண்களுக்குத் தேவையான கலோரி இதிலிருந்து சற்று வேறுபடும். (உடல் எடை x 10) + உடல் எடை. அதாவது எழுபது கிலோ எடையுள்ள ஒரு பெண்ணுக்கு 770 கலோரிகள் தேவைப்படுகின்றன. நல்ல உடல் உழைப்பைச் செலுத்தும் நபர்கள் அதிக அளவில் கலோரிகளை உட்கொள்ளலாம்.

ஒரு கைப்பிடி அளவு வறுத்த கடலையை சும்மா உண்ணும்போது நீங்கள் உடலில் சுமார் இருநூறு கலோரிகளைச் சேர்க்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயணத்தின் போதோ, தொலைக்காட்சி பார்க்கும் போதோ கொறிப்பதனால் ஏற்படும் தீமைகளைக் குறித்த விழிப்புணர்வு அவசியம்.

இந்த கலோரி அளவைப் பார்த்து உண்பது பலவேளைகளில் நமக்கு முடியாமல் போகலாம். பொதுவாகப் பார்க்கும்போது, தானிய வகைகள் அதிகமாகவும், காய்கறிகள் பழங்கள் அதைவிட சற்றுக் குறைவாகவும், எண்ணை , இறைச்சி போன்ற கொழுப்புச் சத்துகள் மிக மிகக் குறைவாகவும் பயன்படுத்தும் போதும், அதிக அளவில் சாப்பிடாத போதும் நமக்குத் தேவையான கலோரிகளை மட்டுமே நாம் பெறுகிறோம்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு உங்களை நீங்களே கேட்க வேண்டிய கேள்விகள் இவைதான். என்ன உண்ணவேண்டும், எப்போது உண்ண வேண்டும், எங்கே உண்ண வேண்டும், எவ்வளவு உண்ண வேண்டும். நம்முடைய வாழ்வில் கலந்து விட்ட நோய்களுக்கு மருத்துவரைத் தேடி ஓட வேண்டிய தேவையை விட்டு விட்டு நம்முடைய அன்றாட வாழ்வின் உணவுப் பழக்கத்தை சற்றே சீர்தூக்கிப் பார்ப்பதன் மூலமாக மிகப் பெரிய நோய்களைத் தவிர்க்க முடியுமெனில் அதைவிடச் சிறந்த வழி ஏது.